குருகுலம்


வேதமூலம் இதம் ஜகத் என்று தர்மசாஸ்திரம் கூறுகிறது. இவ்வுலக இயக்கத்திற்கும் மனிதர்களின் தர்மமார்க்க வாழ்க்கைக்கும் தேவையான அனைத்து விஷயங்களையும் கூறுவதால் வேதங்கள் உலகின் ஆணிவேராகக் கருதப்படுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் தலைமுறை தலைமுறையாக இவ்வேதங்கள் முனிவர்களும் மஹரிஷிகளும் அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் போதித்தும் அதன் உட்பொருள்களான வேதாந்த தத்துவங்களை உபதேசித்தும் காப்பாற்றிவந்தனர். குருநாதருடைய இல்லத்தில் நான்கு அல்லது ஐந்து சீடர்கள் தங்கியிருந்து வேதங்களைக் கற்பார்கள். இதற்கென சன்மானமோ அல்லது உணவிற்கான செலவுத்தொகையோ ஏதும் பெறாமல் வேதத்தைக் காக்கவேண்டும் என்ற ஒரேசிந்தனையில் இந்த மாபெரும் கல்வியாகம் பல குருநாதர்களின் இல்லங்களில் இயங்கி வந்தது. இதனையே குருகுலவவாசம் என்பர். அப்போதிருந்த அரசர்களும் செல்வந்தர்களும் இந்த குருகுலவாச வேதஸம்ரக்ஷணத்திற்கு உதவிபுரிந்து வந்தனர்.

1942 ம் ஆண்டு திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் 24 வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ ஷண்முகதேசிக சுவாமிகள் அவர்கள் ஒரு புதியமுயற்சியாக ஆலயங்களில் பூஜை செய்யும் சிவாசாரியார்களுக்கு வேதங்களோடு ஆகமசாத்திரங்களையும் பயில்விக்கவும், ஆலயபூஜைமுறைகளான வேதாகம பத்ததிகளைக்காப்பாற்றிடவும் ஒரு வேதசிவகமப் பாடசாலையை நிறுவி எங்கள் குருநாதராகிய சிவபுரம் சிவஸ்ரீ எஸ். சுவாமிநாதசிவாசாரியார் அவர்களை முதன்மைக்குருவாகக் கொண்டு துவங்கினார்கள். அதுமுதல் அப்பாடசாலையில் பலநூற்றுக்கணக்கான சிவாசாரிய மாணவர்கள் பயின்று தமிழகத்திலும் மற்றும் உலகெங்கும் திருக்கோயில்களில் வேதாகம நெறி வழுவாது பூஜைகளைச் செய்து வருகிறார்கள்.

சிவபுரம் வேதசிவாகம பாடசாலை

1989 ம் ஆண்டு குருநாதர் பரிபூரணம் அடைந்து சிவஸாயுஜ்யம் பெறவே அவரது ஜன்மபூமியாகிய சிவபுரம் எனும் சிவக்ஷேத்திரத்தின் பெயரில்  சிவபுரம் வேதசிவாகமபரிபாலன சபை அறக்கட்டளை மயிலாடுதுறை ஸ்ரீமாயூரநாதர் தெற்குவீதியில் துவங்கப்பட்டு வேதநெறி வழுவாத குருகுலவாசமாக சிவாசாரிய மாணவர்களுக்கு கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக வேதாகமங்களைப் போதிக்கும் மையமாக இயங்கி வருகிறது.
இங்கு பயிலும் மாணவர்களுக்கு வேதம் சிவாகமம் வடமொழி இலக்கண இலக்கியங்கள் மற்றும் தமிழ்வேதமாகிய திருமுறைகள் ஆகியன தனித்தனி ஆசிரியர்களைக் கொண்டு ஐந்தாண்டு பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டு வருகின்றன. இது வரை ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுதும் சிறந்த அர்ச்சகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பயிலும் மாணவர்களிடம் எவ்விதக் கட்டணங்களும் பெறுவதில்லை.திருவாவடுதுறையாதீனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கும் ஐம்பது சென்ட் இடத்தில் பல நன் கொடையாளர்களின் உதவியுடன் விசாலமான கட்டிடம் கட்டப்பட்டு மாணவர்கள் தங்கும் விடுதி  வகுப்பறைகள் உணவுக்கூடம் சுத்தமான குடிநீர் மற்றும் குளியறை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

வேதார்த்தி ஸமாராதனா

இக்கல்வி நிறுவனத்தில் தற்போது ஐம்பத மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பாடசாலையின் ஒருநாள் பராமரிப்பு செலவாகிய ரூபாய் பத்தாயிரம் நன்கொடையாக வழங்குபவர்களுக்காக ஆயுஷ்யஹோமம் கோபூஜை முதலியன நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மூன்றுவேளை உணவும் வழங்கப்படுகிறது.