எல்லாம் வல்ல இறைவன் நம்மீது கொண்டுள்ள பெரும் கருணையினாலும் அன்பினாலும் இவ்வுலக வாழ்க்கையை நமக்கருளி, சகலவிதமான சுகங்களையும் வாரி வழங்கியுள்ளார். அந்த இறைவனே ப்ரணவத்தின் ஒலி வடிவாகி பரமசிவனாகவும் வரி வடிவாகி பார்வதியாகவும் விளங்குகிறார். ஆதி சூக்ஷ்மமான இந்த நிலையெ “பரா” என்னும் வாக்கு.
பரமசிவன் என்ற சதாசிவ தத்துவமே இலிங்கவடி வானது. இந்த மாபெரும் தத்துவத்திலிருந்து அவர் ருக், யஜுர், சாம, அதர்வன என்ற நான் மறைகளையும், ஆகம சாஸ்த்திரங்களையும் நமக்காக மொழிந்தருளினார். அவ்வாறு அருளிய வேதங்களும், ஆகம சாஸ்த்திரங்களும் காற்றில் கலந்தன. இவைகள் ஒலி வடிவாகவே இருந்தன, எழுதப்படவில்லை. ஆகையால் இவை “எழுதாக்கிலவி”என ஆழைக்கப்பட்டன. இவையாவையும் கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்பே அருளிச்செய்யப்பட்டன.
வேதங்களையும்,அதன் உட்பொருளையும், அதன்பின் வந்த அக்ஷரங்களையும் சிவபெருமான் இன்ன மொழியில் தோற்றுவித்தார் என்று எங்கும் (எந்தசாஸ்த்திரங்களிலும்) காணப்படவில்லை. ஈசனுக்கு “வடநிழல் அமர்ந்த மறை முதலாகிய பெருமான்” என ஒரு திருநாமம் உண்டு. அதனால் அம்மந்திர மொழியானது வடமொழி என ஆகியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பின் நாட்களில் வந்த முனிவர்களும், தவயோகிகளும், ஞானியரும் தங்களது தபோவலிமையாலும் ஞான திருஷ்டியினாலும் காற்றில் கலந்திருந்த வேதங்களையும், ஆகமங்களையும் கிரஹித்து இவ்வுலகிற்கு கொணர்ந்தனர் (உதாரணம்: இன்றைய ஒலி, ஒளிப்பெட்டிகள் காற்றில் கலந்திருக்கும் ஆடல், பாடல் முதலியவற்றைமின்சக்தி மூலம் நமக்கு அளிப்பதைப்போல்). நடராஜப் பெருமான் தம் ஆனந்த தாண்டவ முடிவில் தம் உடுக்கையில் பதினாங்கு முறை நாதம் எழுப்புகிறார். உடுக்கையின் ஒலியே “மாஹேஸ்வர சூத்ரங்கள்” எனப்படும் பதினான்கு சூத்ரங்கள் ஆயின.
பின் நாட்களில் தோன்றிய வேதவ்யாஸ மஹரிஷியும், சனகாதி முனிவர்களும் வேதாகமங்களை முறைப்படுத்தி தம் சீடர்களுக்கு போதித்தார்கள்,அச்சீடர்களும் தத்தம் சீடர்கள் அதன்பின்வந்தோர் அனைவரும் வேதாகம சாஸ்த்ரங்களை வாய்மொழி மூலமாகவேகற்றுணர்ந்தனர், பின்னர் ஒலி வடிவான இவை ஏட்டில் எழுதப்பட்டன. “வேதங்களில் விதித்துள்ள கர்மாக்களை நாம் செய்ய வேண்டும், வேதங்களில் கூறப்பட்டுள்ள அனுஷ்டானங்கள் மூலம் ஈஸ்வர பூஜை செய்யவேண்டும்” இதுதான் நாம் செய்யும் சிறந்த ஈஸ்வர பூஜை என பகவத்பாதால் கூறியிருக்கிறார். பல யுகங்களை கடந்ததும் பரிபூரண ஞானமும், ஆனந்தமும்,உவமையற்றதும், பல நூறாயிரம் வாக்கியங்களை கொண்டதுமான வேதாகமங்களை ஆன்றோரும், சான்றோரும் காப்பாற்றி பாடசாலைகள் மூலமாக வகுப்புகள் நடத்தியும் வழி வழியாக பரப்பி வருகின்றனர்.
இப்படி இப்பிரபஞ்சம் தோன்றும் முன்னரே அதாவது இவ்வுலகில் உயிர்களை படைக்கும் முன்னரே அவ்வுயிர்கள் உய்யும் வழியைக் கூறுமுகத்தான் “அண்டர் தமக்கு ஆகமநூல் மொழியும் ஆதியை” என்று சுந்தரர் அருளுவது போல் நமக்கு நம் பெருமான் வேத சிவாகமங்களை அருளிச் செய்திருக்கிறார்.
வேதஸம்ரக்ஷனம் என்பது பன்னெடுங்காலமாக இந்துக்களின் தலையாய கடைமையாக இருந்துவருகிறது. இதனடிப்படையில் ஆலய பூஜை செய்யும் அர்ச்சக வித்யார்த்திகளுக்கு வேதம் , சிவாகம், சாஸ்த்திரம் மற்றும் சைவத்திருமுறைகளைப் பயிற்றுவித்துச் சிறந்த சிவாச்சாரியார்களை உருவாக்கும் மையமாக நமது சிவபுரம் வேத சிவாகம பாடசாலை திகழ்ந்து வருகிறது.
நமது பாடசாலை 1996 ஆம் ஆண்டு மயிலாடுதுறை காவேரிக்கரையில் துவங்கப்பட்டு 1998ல் மாயூரநாதர் தெற்கு வீதியிலும் பின்னர் 2006 ஆம் அண்டு ஸ்ரீ-ல-ஸ்ரீ திருவாவடுதுறை ஆதீனம் அவர்களின் பெருங்கருணையினால் பாடசாலைக்கு இடம் வழங்கப்பட்டு, மற்றும் பல ஆத்தீக அன்பர்களின் பேருதவியோடும் பாடசாலைக்கு புதிய கட்டிடம் எழுப்பபட்டு சரஸ்வதி தேவி வாசம் செய்யும் வேதாகம வித்யா மந்திராக நமது சிவபுரம் வேத சிவாகம பாடசாலை சிறந்து விளங்குகிறது.